பக்கம்:செவ்வானம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 செவ்வானம் தாமோதரனைச் சந்திக்க வேண்டாம் என்றுதான் எண்ணி யிருந்தாள் குமுதம், அவன் தன்னை கெளரவமாக மதிப்பதில்லை என்ற சந்தேகம் அவள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த நினைப்பை அமுக்கிவிட்டு மேலெழுந்த ஆசைதான் வெற்றி பெற்றது. அவரைப் பார்த்துப் பேசி எத்தனையோ நாட்களாகி விட்டன. இன்றுபோய்ப் பார்க்கலாமே! என்று தினம் எழுந்த எண்ணத்தைச் செயலாக்காமலே பல தினங்களைக் கழித்தாள் அவள். அவனால் ஒரு உதவியும் செய்ய முடியாது; கிண்டலாகப் பேசுவான்; அவ்வளவுதான் என்று நினைப்பாள். ஆனாலும் அப்படி அவருடன் பேசுவதிலே ஒரு இனிமை இருக்கிறது என்று அவள் மனம் சொல்லும். முந்திய சந்திப்புகளின்போது தாமோதரன் கூறிய பேச்சு ஏதாவது நினைவுப் பரப்பிலே குமிழிடவும் அவள் முகத்திலே மகிழ்ச்சி பூக்கும். குமுதத்தின் அன்றாட வாழ்க்கை சுடும் வெயிலாக இருந்த போதிலும் அவள் உள்ளம் பசுமையாகத்தானிருந்தது. தனது வேதனையைப்பற்றி அவள் புழுங்கும்போதுகூட அவள் "தாமோதரன் வாழ்க்கையும் வேதனை நிறைந்ததாகத்தான் தோன்று கிறது. அவர் எப்படிவாழ்கிறாரோ புரியவில்லை' என்று எண்ணுவது உண்டு. அவனைப்பற்றி அவள் அறிந்து வைத்திருந்தாள். அவன் எழுத்துக்களையும் படித்திருந்தாள். அவர் நல்லவராகத்தான் தோன்றுகிறார் என்று எண்ணும் மனம். ஆனால் அவனால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது என்று குரல் கொடுக்கும் மனக்குறளி. இப்படி இருவிதப் பண்புகள் ஆட்டி வைத்தபடி இயங்கினாள் குமுதம். அவள் வாழ்வில் புதுமை பூக்க வழியில்லை. என்ன செய்வது? உயிர் வாழவேண்டும். கெளரவமாக வாழ என்னசெய்வது? இக்கேள்விகள் பல உருவங்களெடுத்து அவளைப்பிய்த்துப் பிடுங்கின. விடைதான் கிடைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/114&oldid=841322" இலிருந்து மீள்விக்கப்பட்டது