உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சமூக சேவகி

முகத்திலே பாண்ட்ஸ் ஸ்நோவும் பவுடரும், ஊதுவத்தி மணம் அறையில் கமழ்ந்தது, இலைப்பச்சை ஜார்ஜட் சேலை, அதற்குப் பொருத்தமான 'ஜாக்கட்'— சாருபாலாவை அந்தக் கோலத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் சடுந்தவம் புரிந்துவரும் முனிவர்கள் கண்டாலே போதும், விசுவாமித்திரர் ஆகிவிடுவர்— பாபம், டாக்டர் இரகுராமன் கண்டால் என்ன ஆவான்?குளறினான். தெர்மாமீட்டரைத் தலைகீழாக வைத்து சாருவின் கிண்டலால் தாக்குண்டான் - எவ்வளவு— காலமாக இருக்கிறது என்று கேட்கிறான்; அவள் சிரிக்கிறாள்; மெல்லிய குரலில் 'பைத்யம்' என்று கேலி செய்கிறாள்; வந்ததற்கு எதையாவது தரவேண்டுமே— அதற்காக காட் லீவர் ஆயில் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, மருந்து அனுப்பிவைப்பதாகச் சொல்கிறான்.

"எனக்கு, இந்த ஜுரம் ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால், டாக்டர்! இராத்திரி வேளையிலே, நல்ல தூக்கம் வரமாட்டேனென்கிறது."

"காற்று நன்றாக வருகிறதல்லவா! இல்லையானால் மாடியில் படுத்துக் கொள்ளலாம்..."

"மாடிதானே இது..."

"ஆமாம். மாடியில் என்றால் வெளியில்... ரூமில் அல்ல; வெளியில் படுக்கலாமே என்று சொன்னேன்..."

"வெட்ட வெளியிலா! ப்ளூ வந்துவிடுமே ...."

"ஆமாம், ப்ளூ வந்துவிடும்; ரொம்பக் கெட்டது..."

"டாக்டர்! இங்கு நல்ல காற்றோட்டம் இருக்கிறது... எனக்குத் தூக்கம் வராததற்குக் காரணம் அதுவல்ல..."

"ஏதாவது வலி எடுக்கிறதா ... தலையில், கைகால்...

"நானென்ன நோயாளின்னே தீர்மானமா டாக்டா.."

"நோ! நோ! ரொம்ப ஹெல்த்தியாத்தான் இருக்கிறீர்கள்..."