பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக் கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.

கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்—அவன் விற்றான் கடைக்காரனுக்கு-அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! "பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா—போடா" என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான்— வாழைமரத்துண்டுடன்.

"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?" என்று கேட்டான் கரியன்.

"இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட" என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!

12