பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடையைச் சுற்றி அழுகுரல்!

கரியனும், மற்றக் குழந்தைகளும் பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். "எங்க வீட்டுச் செவ்வாழையடா" என்று.

"எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்—மரத்தை வெட்டி 'பாடை'யிலே கட்டி விட்டோம்" என்றான் கரியன்.

பாபம் சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.