உண்மையிலேயே அவன் பேசியது கேட்கப் பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால், பெண்ணை விற்கும் பேயனை, அடிப்பது தவறா?
“உன்னை அடித்தது தவறா? நீ செய்த காரியம், ஈனத்தனமல்லவா? பட்டப்பகலிலே, நடுவீதியிலே, ஒரு பெண்ணை ஆறணாவுக்கு விலைக்கு விற்பதா?" என்று நான் கேட்டேன்.
"என்ன? என்ன? பெண்ணை விற்றாரா?” என்று பலரும் பதைத்துக் கூவினர்.
"ஆமாம். சரோஜா ஆறணா என்று சொன்னாள்"—என்று கூறினேன்.
உடனே, "அட பைத்யக்காரா" என்று பலரும் கூறிச் சிரித்தனர்.
'அட தடிராமா' சரோஜா, ஆறணா என்று நான் சொன்னது, ஒரு பெண்ணின் விலை என்ற எண்ணிக் கொண்டாய்! முட்டாளே! சரோஜா மில் நூல் விலையல்லவா நான் சொன்னேன்—என்று அடிபட்டவன் கூறினான். ஒரே கேலிச் சிரிப்பு, அட பட்டிக்காட்டானே! மடைமன்னார் சாமி! என்று அர்ச்சனை ஆரம்பமாயிற்று. மேலாடையை இழுப்பவர்களும், காலைத் தட்டிவிடுபவர்களும், சிறுகல்லை வீசுபவர்களுமாகப், பலர் என்னைத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள். என் முகத்திலே அசடு சொட்டிற்று! நான், பூரா உண்மையும் தெரிந்துகொள்ள முடியாது திணறினேன். அடக்க ஒடுக்கமாகப் பேசலானேன்.
"ஐயா! எனக்கொன்றும் விளங்கவில்லை. இந்த ஆள், பெண்ணின் விலையைத்தான் கூறினார் என்றே எண்ணித்தான் கோபித்தேன், அடித்தேன். எனக்கு உண்மையைக் கூறுங்கள்" என்று கேட்டேன்.
அடிபட்டவனே, கூறினான்.
18