பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செவ்வாழை

செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும் போதும், அவன் கண்கள் பூரிப்படையும்- மகிழ்ச்சியால். கரியனிடம்-அவனுடைய முதல் பையன்- காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு.

"குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு