பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீச்சாகவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும்—ரொம்ப ருசி—பழத்தைக் கண்ணாலே பார்த்தாக் கூடப் போதும்; பசியாறிப் போகும்" என்று குப்பியிடம் பெருமையாகப் பேசுவான் செங்கோடன்.

அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள்-அது மட்டுமா—பக்கத்துக் குடிசை-எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமையைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும்-அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!

மூத்த பயல் கரியன், "செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்" என்று சொல்லுவான்.

"ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா—நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும்-வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட்டும்"-என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...

கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே "உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு" என்று குறும்பாகப் பேசுவாள்.


மூன்றவாது பையன் முத்து, "சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா—பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்து விடுவாங்களோ, யாரு

4