பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டாங்க" என்று சொல்லுவான்—வெறும் வேடிக்கைக்காக அல்ல-திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.

செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்-செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்துபோகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்! குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது-கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான் செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும், பட்சணமும், வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்—குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப் பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்து விடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக— மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு! இதிலே பங்கு பெற