பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்து வரும் செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்று சந்தோஷம் செங்கோடனுக்கு.

இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம் போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.

கன்று வளர்ந்தது கள்ளங்கபடமின்றி. செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.

"இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?" கரியன் கேட்பான் ஆவலுடன் செங்கோடனை.

"இரண்டு மாசமாகும்டா கண்ணு" என்று செங்கோடன் பதிலளிப்பான்.

செவ்வாழை குலை தள்ளிற்று-செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டு விட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையை பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய

6