பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைர மாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைர மாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்றமுற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும், சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று. "எப்போது பழமாகும்?" என்று கேட்பாள் பெண். 'எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன். செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம-இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது-அவர் எடுத்துக் கொண்டது போக மீதம் தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்-அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.

இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்-பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது-பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப்

7