பக்கம்:சேக்கிழார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 51


சிற்றரசர்

இந்த யாத்திரையில் சேக்கிழார் சோழ அரசலுக்கு அடங்கிய சிற்றரசர் பலரைச் சந்திக்க வேண்டியவர் ஆனார். அச்சிற்றரசருள் சிலருடைய முன்னோர்கள் நாயனாராக இருந்தவர். உதாரணமாகத் தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவலூரை ஆண்டவர் மலையமான்கள் என்பவர். அவருடைய முன்னோரே மெய்ப் பொருள் நாயனார் என்பவர். அந்த அரச மரபினர் தங்கள் முன்னோர் வரலாற்றை நன்றாக அறிந்திருப்பார்கள் அல்லவா? அதனால் சேக்கிழார் அவர்களைக் கண்டு தம் அரசியல் விஷயங்களைப் பேசிய பிறகு, அவர்கள் மரபில் தோன்றி மறைந்த நாயனார் வரலாற்றை விசாரித் துக் குறிப்புகள் எழுதிக் கொண்டார். இவ்வாறு அந்தந்தப் பரம்பரையினரைக் கேட்டு எழுதுவது மிகச் சிறந்தது அல்லவா? வழிப்போக்கர் பேச்சைக் கேட்டுத் தாறுமாறாக எழுதாமல், தக்கவர் மூலமாக விஷயங்களை அறிந்து எழுதுதல் பாராட்டிடத்தக்க முறையாகும்.

இந்த முறையைப் பின்பற்றிச் சேக்கிழார் சேரர்-சோழர்-பாண்டியர் முதலிய அரச மரபில் வந்த நாயன்மார் வரலாறுகளுக்கு வேண்டிய குறிப்புகளைத் தயாரித்தார்; மற்ற நாயனார். களைப் பற்றிய குறிப்புகளை அந்தந்த ஊராரைக் கேட்டுத் தயாரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/53&oldid=491965" இலிருந்து மீள்விக்கப்பட்டது