பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் , 379 அந்தச் சராசரி மனிதனின் மனநிலையில் சில மாற்றங்கள் தோன்றியே தீரும், கேட்கப்பட்ட பொருள் யாது? அந்தப் பொருள் தன்னிடம் உள்ளதா, அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு (சம்பந்தம்) எத்தகையது? அப்பொருளைக் கொடுக்கத் தனக்கு உரிமை உண்டா? அப்படி கொடுக்க வேண்டுமானால் அப் பொருளின் சம்மதத்தைப் பெற வேண்டுமா?- என்ற வினாக்கள் தோன்றவே செய்யும். இந்த வினாக்கள் தோன்றாமல் இருக்க ஒரே வழி அப்பொருள் அஃறிணையாக இருக்க வேண்டும். அதுவும் தனக்கு அதிகம் தொடர்பில்லாததாய் இருக்க வேண்டும். அப்படி இருக்குமானால் அதை யாராவது கேட்கும்பொழுது மூன்றாவது நிலையில் உள்ள பிரச்சினை தோன்றவே தோன்றாது. இப்பொழுது இந்தப் புகார் வணிகர் யார், எது கேட்டாலும் இல்லை என்னாது தருவதை இயல்பாகக் கொண்டிருந்தார் என்கிறார் சேக்கிழார். அதாவது, தருவதைக் கடமையாகக் கொண்டு தானமாக, புகழுக்குரியதாக அவர் கொடுக்க வில்லை. கொடுக்கும் இயல்பினர் என்றால் சிந்தித்துப் பிறகு கொடுக்கும் நிலை அவரிடம் இல்லை. என்பது தெளிவு, நடக்கப் பழகிவிட்ட கால்களும், கொடுக்கப் பழகிவிட்ட கைகளும் ஒவ்வொரு முறையும் தம் தலைவன் நடக்கச் சொல்கிறானா? கொடுக்கச் சொல்கிறானா? என்று ஆராய்வதே இல்லை.