பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 சேக்கிழார்

அரண்களை அழித்தவன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன்; சிறந்த கொடையாளி.” என்று பெரும்பாண் ஆற்றுப்படை குறிக்கிறது.

இளங்கிள்ளி: ‘மணிமேகலை’ என்ற காவிய காலத்தில் (ஏறத்தாழ, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொண்டை நாட்டை இளங்கிள்ளி என்பவன் ஆண்டு வந்தான். அவன் தமையனான நெடுமுடிக்கிள்ளி சோணாட்டை ஆண்டு வந்தான். இளங்கிள்ளி தொண்டை நாட்டை எதிர்க்கவந்த சேர, பாண்டியரைக் காரிக்கரை (இராமகிரி) என்ற இடத்தில் முறியடித்தான். இளங்கிள்ளி. காலத்திற்றான் மணிமேகலை என்ற மாதவி மகள் பௌத்த பிக்குணியாகிக் காஞ்சியை அடைந்தாள்; இளங்கிள்ளியின் உதவி கொண்டு புத்த பீடிகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடக் கோட்டங்கள் அமைத்தாள். பின்னர், அந்நகரத்திலேயே தங்கி அறவண அடிகளிடம் உபதேசம் பெற்றுத் தவம் கிடந்தாள். எனவே தொண்டை நாடு சங்க காலத்தில் சோழராட்சியில் இருந்தது என்பதற்குப் பண்டை நூல்கனே சான்றாகும்.

காஞ்சி மாநகரம் : இது வடமொழிப் புராணங்களில் பெயர் பெற்றதாகும். முத்தி தரும் நகரங்கள் ஏழனுள் ஒன்று. இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்து சமய போதனை செய்தார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் அங்குப் பல தூபிகளை நாட்டிப் பௌத்த சமயப் பிரசாரம் செய்வித்தான். . அசோகன் - நாட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சங் காலம்வரை (கி.பி. 640-41) அங்கு இருந்ததாகத் தெரிகிறது. கி.மு. 150இல் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தமது விருத்தி யுரையில் காஞ்சி நகரைக் குறிப்பிட்டுள்ளார் எனின், காஞ்சி அப்பழங்காலத்திலேயே சிறந்த கலைப் பீடமாக