பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சேக்கிழார்



செய்விக்கும் பேராற்றல் மிக்க பெரும்புலவர். திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டைநாட்டு வருணனையில் வரும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணைகளின் பொது இலக்கணமும் பின் சிறப்பிலக்கணமும், பிறகு ஒவ்வொரு நிலத்துக் கருப்பொருள் உரிப்பொருள்களும் பிறவும், அவற்றின் பின் திணை மயக்கமும் (நெய்தலும் குறிஞ்சியும் மயங்குதல், மருதமும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல் போன்றவை). படித்துப் படித்து இன்புறத்தக்கவை. தொல்காப்பியத்துள் குறிப்பாகக் கூறப்பட்ட இத் திணை மயக்க இலக்கணத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளாகச் சேக்கிழார் பாக்கள் இலங்கக் காணலாம். இத்தகைய வியத்தகு புலமையுணர்வை நன்குணர்ந்தே காஞ்சிப் புராணத்துள் தொண்டை நாட்டு வருணனையைக் கூறப்புகுந்த மாதவச் சிவஞானயோகிகள்,

           'திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத் திணைவள
                                                (மும் தெரித்துக் காட்ட 
            மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர்க் குல
                                                (கவுமே அல்வா 
            கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு
                                                (தெரிந்துரைப்பார்!.... 

என்று சேக்கிழார் பெருமானைப் பாராட்டியுள்ளார். எனின், அப்பெரும் புலவர் புலமைத்திறனைப் பாராட்டாதார் யாவர்.

இத்தகைய பெரும் புலவர் காவியங்களைத் தமிழ் மக்கள் படித்து இன்புற்று. அப்புலவர் நாட்களை நாட்டவர் அறியச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் நாளே தமிழ் வளர்ச்சிக்குரிய நன்னாள் ஆகும்.