பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 சேக்கிழார்

பெரியபுராணச் சிறப்பு நோக்கி அறிஞர் இட்ட தகுதிப் பெயர் எனக் கோடலே பொருத்தமாகும்.

உத்தம சோழப் பல்லவராயர்: இதனை ‘அநபாயன் எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் சேக்கிழார்க்கு வழங்கினான்’ என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். இப்பட்டம் முதற் கல்வெட்டிலும் காணப்படுதல் இக்கூற்றை உறுதிப்படுத்துவதாகும்.

பாலறாவாயர்: ‘சேக்கிழார் இளவல் பாலறாவாயர் என்பவர் அவர், சேக்கிழார் அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சோழ அரசியலில் உயர்ந்த அதிகாரியாக்கபட்டார்’ என்பது சேக்கிழார் புராணச் செய்தி ஆகும். இதனை உறுதிப்படுத்துவது போல இராசராசன் காலத்துக் கல்வெட்டும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டும் காண்கின்றன. அவ்விரண்டிலும் ‘சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்’ என்பது காணப்ப்டுகிறது. இப்பெயர் கொண்டவர் திரு அரத்துறை (தென் ஆர்க்காடு மாவட்டம் கோட்டுர்க் (தஞ்சாவூர் மாவட்டம்) கோவில்கட்குச் சிலதானங்கள் செய்த சிவ கதர் என்பது அக் கல்வெட்டுகளால் தெரிகிறது. இவர் திரு அரத்துறையிலிருந்து மாசி, வைகாசி விழாக் காலங்களில் ஆளுடைய பிள்ளையார் திருமேனியைத் திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்கையில் நடைபெறும் பூசை முதலிய வற்றுக்காக வரியிலியாக நிலதானம் செய்தார். கோட்டுர்க் கோவிலில் விளக்கெரிக்கப் பணம் உதவி செய்தார்.

அநபாயன்: இவன் சிறந்த சிவபக்தன் என்று கல்வெட்டுகளும், ஒட்டக்கூத்தர் இவன்மீது பாடிய உலாவும் உரைக்கின்றன. இவன் காலத்தில் சிதம்பரம் ஒப்புயர்வற்ற சிறப்பைப் பெற்றது. ‘இவன் புவன முழுதுடையாள் என்று , தன் அரசமாதேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப்-