பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்19

சிவனடியாராக இருந்தார் என்பது அக் கல்வெட்டால் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியர் குறிந்த‘ உத்தம சோழப் பல்லவராயர்’ என்ற பட்டமும் அவர் ஒருவருக்குத்தான் காணப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்க, முதற் கல்வெட்டிற் கண்ட இராமதேவன் என்பவரே பெரிய புராணம் பாடிய சேக்கிழார் என்பதை நம்பலாம்.

இராமதேவன்: ‘இவ்வைணவப் பெயர் சைவமரபில் வந்தவர்க்குப் பெயராக இருந்திருக்குமா?’ என்று சிலர் ஐயுறலாம். அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவராகிய முனையரையர்க்கு ‘நரசிங்கர்’ என்ற வைணவப் பெயர் இருந்தமையும், ஒன்பதாந்திருமுறைப் பாக்களைப் பாடிய சிவனடியாருள் ஒருவர்க்குப் புருஷோத்தம நம்பி என்ற பெயர் இருந்தமையும் நோக்கினால், இவ்வையம் எழ இடம் இராது. சேக்கிழார் மரபினர் வைணவப் பெயர் தாங்கல் பண்டை வழக்கம் என்பதை எட்டாம் கல்வெட்டைக் கொண்டும் உணரலாம்.

மாதேவடிகள்: சேக்கிழாரது பக்திச் சிறப்பை நோக்கியும் பெரிய புராணம் ஆகிய அருள்நூலைப் பாடிய தகுதி நோக்கியும் அவரைக் குன்றை முனி சேக்கிழார். அருந்தவந்தனில் இருந்தவர் என்றெல்லாம் சேக்கிழார் புராண ஆசிரியர் செப்பியுள்ளார். இஃதுண்மை என்பதை ‘மாதேவடிகள்’ என்ற அடையால் கல்வெட்டு வற்புறுத்துகிறது. ‘மகா தேவனுக்கு அடிமை பூண்டவர்’ என்பது இதன் பொருள். இச்சிறப்புடைய அடை, சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பிறகு வழக்கிற்கு வந்திருக்கலாம்.

அருள்மொழித் தேவர்: இது சேக்கிழாரது இயற்பெயர் என்று புராண ஆசிரியர் கூறுகிறார். இப்பெயரும் ‘மாதேவடிகள்’ என்றாற் போன்ற சிறப்புப் பெயர்