பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 சேக்கிழார்

என்பதே ஆகும். இதனையே குலோத்துங்கன் உலாவும் கல்வெட்டுகளும் குறிக்கின்றன. சேக்கிழார் இஃதொன்றையே அவனைக் குறிக்கும் பத்து இடங்களிலும் வைத்துப் பாடியுள்ளார். இப்பெயரையே இவன் காலத்திற் செய்யப்பட்ட தண்டியலங்கார உதாரணப் பாக்களிலும் காணலாம். இவனது அரசியல் செயலாளன் ‘அநபாய மூவேந்த வேளான்’ எனப்பட்டான். இவன் காலத்துச் சிற்றரசருள் ஒருவன் ‘அநபாய காடவராயன்’ எனப் பெயர் பெற்றான். இவன் காலத்தில் கோவில்கட்கு விடப்பட்ட நிலங்கள் அநபாய நல்லூர், “அநபாய மங்கலம்” எனப் பெயர் பெற்றன. இவை அனைத்தையும் நோக்க, இரண்டாம் குலோத்துங்கனுக்கு அநபாயன் என்பதே சிறப்புப் பெயராக விளக்கமுற்றிருந்தது. என்பது நன்கு புலனாகும்.

இவன் காலத்துச் சிற்றரசர்: 1. பல்லவப் பேராசர் மரபில் வந்தவர் சோழப் பேராசில் உத்யோகமுடையவராக இருந்துவந்தனர். அவருள் மோகன் ஆட்கொல்லி என்பவன் குறிப்பிடத் தக்கவன். அவனுக்குக் ‘குலோத்துங்க சோழக் காடவராயன்’ என்ற பெயரும் உண்டு. அவன், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருமாணிக்குழி என்ற பாடல்பெற்ற தலத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான் பின்னர்ப் படிப்படியாகப் பல உயர்ந்த பதவிகளை வகிக்கலானான். திருநாவலூர், திருவதிகை, விருத்தாசலம் போன்ற பெரிய கோவில்கட்கு அவன் செய்துள்ள அறங்கள் பலவாகும். சிறப்பாகத் திருவதிகைக் கோவிலுக்கு அவன் செய்த அறங்கள் மிகப் பலவாகும்.

2. திருக்கோவலூர் உள்ளிட்ட மலைநாட்டை ஆண்ட மலையமான்கள் ‘சேதிராயர்’ என்ற பட்டத்துடன் சோழராட்சியில் குறுநில மன்னராக இருந்தனர். அவருள் சேக்கிழார் காலத்தவர் இருவராவர். அவர்