பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்23

விக்கிரமசோழச் சேதிராயன். குலோத்துங்கசோழச் சேதிராயன் என்பவர்.

3. கர்நூல், சித்துர், நெல்லூர் முதலிய பகுதிகளை ஆண்ட தெலுங்குச் சோழர் (சோடர்), ரேநாண்டுச் சோழர் மரபினர் ஆவர். ‘இவர்கள் கரிகாலன் மரபினர்’ என்று பட்டயங்கள் பகர்கின்றன. அவர்கள் திருக்காளத்திக் கோவிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள் எண்ணிறந்தன. அவருள், சேக்கிழார் காலத்தில் குலோத்துங்க சோழ கொங்கன் என்பவன் சிற்றரசனாக இருந்தான்.

4. கடப்பை ஜில்லாவில் பொத்தப்பி நாட்டை ஆண்டவரும் சோழ மரபினரே ஆவர். பொத்தப்பி நாடு கண்ணப்பர் பிறந்த நாடாகும். சேக்கிழார் காலத்தில் பொத்தப்பி நாட்டையாண்ட சிற்றரசன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன்.

குறிப்பிடத்தக்க இச்சிற்றரசர்களைத் தவிர வேறுபலரும் சோழப் பெருநாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் உள்ளடக்கிய சோழப் பெருநாட்டின் முதல் அமைச்சராகத்தான் சேக்கிழார் இருந்து வந்தார்[1]

அநபாயன் காலத்துச் சைவத் திருப்பணிகள்: இரண்டாம் குலோத்துங்கனது ஆட்சி கி.பி. 1183 முதல் 1150 வரை இருந்தது. இப்பதினேழு ஆண்டுகளில் எந்த ஆண்டில் சேக்கிழார் சோழ முதல் அமைச்சர் ஆனார்-எந்த ஆண்டில் பெரிய புராணம் பாடினார் என்பன துணிந்துரைக்கக் கூடவில்லை. அதனால், பெரியபுராணம் பாடப்பெற்ற பிறகுதான் பல கோவில்களும் அநபாயன் ஆட்சியில் சிறப்புப் பெற்றன என்று கூறுதற்கில்லை. அவனது குறுகிய ஆட்சியில் திருமழபாடி, திருஆமாத்தூர்,


  1. சேக்கிழார் புராணம். செ - 18