பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

33

வாழ்ந்தனர் என்று அப்பர் கூறியுள்ளார். அவர்கள் திடீரென்று அப்பர் காலத்தில் கடவுளாற் படைக்கப்பட்டவர். அல்லர் அல்லவா? என்வே மேற் சொன்ன பலவகைச் சிவனடியார்கள் அப்பர்க்கு முன்னமே இந்நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்தனராதல் வேண்டும். என்று சைவம் உண்டாயிற்றோ என்று சிவன் கோவில் உண்டானதோ - அன்று தொட்டே இந்நாட்டில் சிவனடியார்கள் இருந்து வந்தனர் என்பது அங்கைக் கனியாகும்.

முடிவுரை: இதுகாறும் கூறிவந்த செய்திகளால், சங்க காலத் தமிழகத்திலும் அப்பர்க்கு முற்பட்ட தமிழகத்திலும் பல சிவன் கோவில்கள் சிரிய நிலையில் இருந்தன: பலவகைச் சிவனடியார் இருந்தனர். கோவில்களில் ஆடல், பாடல், விழா, வழிபாடு முதலியன சிறப்புற நடைபெற்றன. கோவில் கட்டும் கலையில் நம்மவர் பண்பட்டிருந்தனர். சைவசமயம் அரசராற் பேணி வளர்க்கப்பட்டது என்பன போன்ற செய்திகளை அறியலாம்.

4. பல்லவர் காலச் சைவ சமயம்

(கி.பி. 400 - 900)

பல்லவர் காலம்: சங்ககாலத்தின் இறுதி எல்லை ஏறத்தாழ.கி.பி. 400 எனச் சென்ற பகுதியிற் கூறப் பட்டதன்றோ? அந்தக் காலமுதல் பல்லவப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலம் (ஏறத்தாழ கி.பி.900) வரை 'பல்லவர் காலம்’ என்னலாம்.


பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது கி.பி.400-க்கு முன்பே எனினும், சைவத்தொண்டு செய்த முதல் பல்லவன் கந்த சிஷ்யனே (கி.பி. 400-436) ஆதலின், சைவ சமய வளர்ச்சிக்காக, இவன் காலமே பல்லவர்கால முதலாகக் கொள்ளப்பட்டது.