பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

35

முன்வரை பல்லவர் காஞ்சியில் நிலையாக இருந்து ஆட்சி செய்யக்கூடவில்லை ஆயினும், கி.பி. 600 முதல் 900 வரை அவர்கள் பேரரசு தமிழகத்தில் வன்மையுற்று விளங்கியது. பல்லவர் அரசு தொடர்ச்சியாக இருந்து வந்தது. அங்ங்னமே கி.பி. 600 முதல் பாண்டிய அரசும் தொடர்பாக விளக்க முற்றிருந்தது.

நாயன்மார் காலம். சங்க (கி.பி.400-க்கு முற்பட்ட) நூல்களில் நாயன்மார் ஒருவரேனும் குறிக்கப்பட்டிலர்: நாயன்மார் பெயர்களைக் குறிப்பிட்டுத் தொகை பாடிய சுந்தரர்காலம் ஏறத்தாழ கி.பி. 840-865 என்னலாம். அப்பர்சம்பந்தர் காலம் ஏறத்தாழ கி.பி.580-661, இவ்விருவரும் தமக்கு முற்பட்டவராக நாயன்மார் பலரைத் தம் பதிகங்களிற் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருவராற் குறிக்கப்படாமல் சுந்தரரால் மட்டும் அவரது திருமுறையில் சிறப்பாகக் குறிக்கப்பட்ட அடியார் பலர். எனவே, (1) அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்டவர் (கி.பி. 400-600) (2) அப்பர்சம்பந்தர் காலத்தவர் (கி.பி.600-661), (3) அப்பர்சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்ப்ட்ட (கி.பி. 661-840) காலத்தவர், (4) சுந்தரர் காலத்தவர் (கி.பி.840-865) என நாயன்மார் நான்கு கால எல்லைக்கு உட்பட்டவர் ஆவர். எங்ங்னம் பார்ப்பினும், நாயன்மார் அறுபத்து மூவரும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் தோன்றிச் சைவத்தை வளர்த்து மறைந்த பெருமக்களே ஆவர் என்னலாம்.

அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட காலம்

(கி.பி. 400 - 600)

அப்பர், சம்பந்தர் பாக்களைக்கொண்டு அவர்க்கு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் பதின்மர் ஆவர் வரலாற்றுக் கண்கொண்டு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் எழுவர்