பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சேக்கிழார்

ஆவர். எனவே, இக்காலத்தில் 17 நாயன்மார் வாழ்ந்தனர் எனக் கூறலாம். அவர் (1) கண்ணப்பர், (2) கணம்புல்லர், (3) அரிவாள் தாயர், (4) நமிநந்தி அடிகள், (5) தண்டியடிகள், (6) கோச்செங்கணான், (7) கூற்றுவ நாயனார், (8) புகழ்ச்சோழர், (9) எறிபத்தர்.(10) புகழ்த்துணை நாயனார். (11) காரைக்கால் அம்மையார் (12) மூர்த்தி நாயனார், (13) ஐயடிகள் காடவர்கோன், (14) சண்டேச்வரர் (15) திருமூலர், (16) சாக்கிய நாயனார். (17) அமர்நீதி நாயனார் என்பவராவர்.

இவருள், காரைக்கால் அம்மையாரும் காடவர்கோனும் பாடியுள்ள பாக்களை ஆராய்ந்தால், அக்காலத் தமிழகத்திற் பல ஊர்களில் சிவன் கோயில்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை உறையூர், சேய்ஞலூர், கருவூர், காஞ்சி, தண்டலை, ஆப்பர்டி, ஆலங்காடு, ஆவடுதுறை, காளத்தி, ஆலவாய் (மதுரை), தில்லை. ஆரூர், பழையாறை என்னும் ஊர்களில் உள்ளவை ஆகும். அவை அல்லாமல் கோச் செங்கட்சோழன் சாய்க்காடு, நன்னிலம் முதலிய எழுபது இடங்களில் புதியனவாக எடுப்பித்த கோவில்களும் குறிக்கத்தக்கவை. இவையாவும் கோச்செங்கணான் போன்ற பெரிய அரசர்களால் போற்றிப் பாராட்டப்பட்டமையின், சிறந்த நிலையில் இருந்தன என்னலாம்.

ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் பாடிய 'க்ஷேத்திர வெண்பா' என்பது அழிந்த நிலையில் கிடைத் துள்ளது. அதில் 23 சிவத் தலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. நூல் முழுவதும் கிடைத்திருக்குமாயின். மேலும் பல தலங்களின் பெயர்களை அறியக்கூடும். ஐயடிகள் ³


³ஐயடிகள் - பஞ்சபாத சிம்ஹன் அஃதாவது, மூன்றாம் சிம்மவர்மன் (சிம்ம விஷ்ணுவின் தந்தை) என்பர் ஆராய்ச்சியாளர்.