பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 சேக்கிழார்

பல்லவர் ஆட்சியில் கோவில்கள் சிறப்புற்று விளங்கினமையின், அப்பர்க்கும் சம்பந்தர்க்கும் கோவில்களில் வரவேற்பும் பிறசிறப்புகளும் நடைபெற்றன. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் சமய போதனை, அடியார்க்கு உணவு வசதி, தங்கல் வசதி முதலியன சிறப்பாக அளிக்கப்பட்டன.கோவில்களை அடுத்து மடங்கள் இருத்தல், சமணப் பள்ளிகளை அடுத்துப் பாழிகள் இருந்தமை போலாகும். நாயன்மார் ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தர். உணவுச்சாலை முதலியன வைத்துப் பொது மக்கட்குத் தொண்டுசெய்து அவர்களைச் சைவத்தில் பற்றுள்ளம் கொள்ளச் செய்தனர். அக்காலச் சைவ அடியார்களுக்குள் மேல் வகுப்பு - கீழ் வகுப்பு, முதலாளி - தொழிலாளி, அரசன் - ஆண்டி கற்றவன் - கல்லாதவன் என்ற வேறுபாடுகள் காட்டப்பட்டில, பக்தி ஒன்றையே சமய அடிப்படையாகக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றுபட்ட உள்ளத்தவராய்ச் சைவப் பயிர் தழைக்க உழைத்தனர். இளஞ் சிறுவராகிய சம்பந்தர் என்ற மறையவர். முதுமையும் பக்தியின் மேன்மையும் கொண்ட வேளாளராகிய, திருநாவுக் கரசரை, அப்பரே! (தந்தையே) என அழைத்தமையும், அப்பூதி அடிகள் என்ற மறையவர் திருநாவுக்கரசரைப் பணிந்து பாத பூசை செய்து உடனிருந்து உண்டமையும், திருநீல நக்கர் என்ற மறையவர் தமது இல்லத்தில் வேள்விக் குழியண்டைப் பாணர் வகுப்பி னரான திருநீலகண்டரையும் அவர் மனைவியாரையும் தங்கியிருக்க விட்டமையும் மேற்கூறியதற்குத் தக்க சான்றுகள் ஆகும். இங்ஙனம் அப்பர்-சம்பந்தர் காலத்தில் பல்லவ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் சைவ சமயம் வளர்க்கப்பட்டதற்கு அடியார்களின் ஒத்தகருத்தும் அரசர் காட்டிய ஆதரவுமே சிறப்புடைக் காரணங்கள் ஆகும்.