பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 39

நாயன்மார்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் உள்ள கோவில்களில் அவர்களுடைய நினைவுக்கு அறிகுறியாகக் கற்சிலைகள் எழுப்பபட்டிருந்தன போலும் அவற்றுக்குப் பூசை முதலியன நடைபெற்று வந்திருக்கலாம். என்னை? அவ்வத்தலத்துப் பதிகத்தில் அப்பரும் சம்பந்தரும் அவ்வந்நாயன்மார் பக்தியைப் பாராட்டிப் பாடியிருத்தலால் என்க அப்பரது திருத்தொண்டின் உறைப்பால் பல்லவநாடு சைவ சமயத்திற்கு ஆட்பட்டாற்போலச் சம்பந்தர் திருத்தொண்டால் பாண்டிய நாடு சமணத்திலிருந்து சைவசமயத்தை ஏற்றுக் கொண்டது. சம்பந்தர் பாண்டிய நாட்டில் இருந்த சமணமுனிவரை அனல்வாதம், புனல்வாதம் முதலியவற்றில் வென்றார். பாண்டியனது வெப்பு நோயை அகற்றினார். சம்பந்தர்க்கு உதவியாகப் பாண்டியன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் - அமைச்சராகிய குலச்சிரை நாயனாரும் இருந்து தொண்டு செய்தனர். சமணனாக இருந்த பாண்டியன் நெடுமாறன் சைவன் ஆனான் சம்பந்தருடன் பாண்டி நாட்டுச் சிவத்தல யாத்திரை செய்தான். சமணரது ஆதிக்கத்தைத் தன் நாட்டிலிருந்து ஒழித்தான். சம்பந்தரது இச்செயற்கரிய திருத்தொண்டால் பாண்டி நாட்டுச் சிவத்தலங்கள் சிறப்புற்றன. மக்கள் பழையபடி சைவத்தைத் தழுவி வளர்க்கலாயினர்.

அப்பர். சம்பந்தர் பாடிய பதிகங்கள் அவ்வத்தலத்து அடியாரால் எழுதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டிருக் கலாம். அவை அவ்வக் கோவில்களிலும் ஓதப்பெற்றன வாகலாம். அப்பர். சம்பந்தருடன் தல யாத்திரை சென்ற அடியார்கள். தலந்தோறும் அவர்கள் பாடிய பதிகங்களை எழுதி வந்தனர் எனலாம். அப்பர். சம்பந்தருடன் அடியார் பலர் கூடித் தலயாத்திரை செய்து நாடெங்கும்.பக்தியைப் பரப்பி வந்தனர்.