பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 சேக்கிழார்

ஆகமங்களில் பற்றுடையவன் என்பது அறியப்படும். இப்பல்லவ வேந்தன் சிறந்த இசைப்புலவன்: இசைக் கருவிகளை மீட்டுவதில் இணையற்றவன் நடனக்கலையில் சீரிய புலமை உடையவன் இக்கலியுகத்தில் வான் ஒலி (அசரீரி) கேட்டவன். இவன் காஞ்சியில் ஐராவதேசர் கோவில், மதங்கீசர் கோவில், கயிலாசநாதர் கோவில் என்பனவும். மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாகவுள்ள கோவில், பன்மலைக் கோவில் என்பவற்றையும் கட்டியவன். இவன் கட்டிய கயிலாசநாதர் கோவிலில் இவன் காலத்துச் சிறந்த நடன வகைகள் சிற்பவடிவிற் காட்டப்பட்டுள்ளன: சிவபிரான் ஆடிய உயர்தர நடன வகைகள் வியக்கத் தக்கவாறு விளக்கப்பட்டுள்ளன. சிவபெருமானுடைய திருக்கூத்தின் சிறப்பைத் திருநாவுக்கரசர் தேவாரத்திற் படித்து இன்புறலாம்; ஆனால், அவ்விவரங்களைக் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களில் கண்களாரக் கண்டு களிக்கலாம்.

பல்லவ மன்னன் (கி.பி. 725-790), இவன் சிறந்த வைணவன் திருமங்கை ஆழ்வார் காலத்தவன். இவன் வைணவன் ஆயினும், இவன் காலத்திற் சிவன் கோவில்கள் சிறப்புற்று விளங்கின. காஞ்சியில் உள்ள மூத்திசர் கோவில் திருக்குறிப்புத்தொண்டர் பூசித்தாகும். அஃது இவன் காலத்தில் 'தர்ம மகா தேவீச்வரம் என்ற பெயருடன் விளங்கியது. அதனில் 44 தேவரடியார் இருந்து இசை, நடனக் கலைகளை வளர்த்தனர். சிற்றரசர் பலரும் குடிமக்கள் பலரும் நாடெங்கும் இருந்த கோவில்கட்குப் பல தானங்கள் செய்துள்ளனர். இப்பல்லவ வேந்தன் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பிரமதேயமாகப் பல ஊர்களை விட்டவன். சுருங்கக்கூறின், இவன் காலத்தில் சைவமும் வைணவமும் ஒருங்கே வளர்க்கப்பட்டன என்னல் தவறாகாது.