பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சேக்கிழார்

(முருக நாயனார்), திருக்குறிப்புத் தொண்டர், தண்டிப்பெருமாள் என்பன. இக்கல்வெட்டு எழுத்துகள் முதல் இராசராசன் காலத்தனவாகக் காண்கின்றமையால், இந்நாயன்மார் உருவச் சிலைகளும் ஏறத்தாழ இராசராசன் காலத்தன என்று கொள்ளலாம்.

3. கங்கைகொண்ட சோழபுரம. அதன்கண் உள்ள வியத்தகு பெரிய கோவிலும் இராசேந்திரன் காலத்தன என்பது முன்பே குறிக்கப்பட்ட செய்தியாகும். அப்பெரிய கோவிலில் நடுமண்டபத்திற்குச் செல்லும் வடக்கு வாயிற்படி ஒரம் கரணப்படும் சண்டீசர் உருவம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தக்கது. சிவபெருமான் உமையம்மையுடன் இருந்து சண்டீசர் முடியில் தம் கொன்றை மாலை சூட்டி, அவருக்குச் சண்டீசப்பதம் தருகின்ற காட்சியை விளக்கும் அச்சிற்பம் கண்டு களிக்கத்தக்கது. அதனைப் படத்திற் கண்டு மகிழ்க, இஃதன்றி, நடு மண்டபச்சுவரில் நான்கு வரிசைகளிற் சண்டீசர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இச்சிற்பங்களும் அக்கோவிலில் உள்ள ஏனைய சிற்பங்களும் ஒரே காலத்தனவாகக் காண்கின்றன. எல்லாச் சிற்பங்களும் கோவில் கட்டப்பெற்ற காலத்திலேயே செய்யப்பட்டனவாகவே காண்கின்றன. ஆகவே, இச்சிற்பங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் . முற்பட்டவை என்னலாம்.
சிவனடியார் சித்திரங்கள். இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச்சுவர் ஒன்றில் காணப்படும் ஒவியங்கள் கவனிக்கத் தக்கவை. அவை சுந்தரர் வரலாற்றை விளக்குவன.
1. ஒரு சித்திரம் சிவபெருமான் கயிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அவர் மான்தோல் மீது யோக