பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

다. சேக்கிழார்

தஞ்சாவூர், இராசராசன் காலம்வரை சோழப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. அவனுக்குப் பின் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இறுதிவரை விளங்கினது. அதனால், இராசராசனுக்குப் பிறகு தஞ்சாவூர் சிறப்பிழந்து விட்டதென்னல் தவறாகாது. இராசராசன் பெரிய கோவிலைக் கட்டினவன். அக்கோவிலில் அப்பர் சம்பந்தர், சுந்தரர் உருவச்சிலைகள் அவன் காலத்திற்றான் எடுப்பிக்கப் பெற்றுச் சிறப்படைந்தன. அப்பேரரசன் காலத்திற்றான் திருமுறைகள் வகுக்கப்பட்டன; மூவர் சிறப்பு மிகுதியாகத் தமிழ்நாடு அறிய வாய்ப்பு உண்டானது. இவை அனைத்தையும் நோக்க, மேற்சொன்ன ஒவியங்களும் இராசராசன் காலத்தனவாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளலே பொருத்தமுடையது. இம்முடிவு பொருத்தமாயின், இச்சித்திரங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் முற்பட்டன என்று கூறலாம்.

மக்கள் வழங்கிய நாயன்மார் பெயர்கள். பல்லவர் காலத்திலேயே மக்கள் நாயன்மார் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்ட தன்றோ? அப்பெயர்களைச் சோழர் கால மக்கள் மிகுதியாக இட்டு வழங்கினர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவை அனைத்தையும் கூற இடமில்லை. ஆதலின், இன்றியமையாத சில பெயர்களை மட்டும் இங்குக் கூறுவோம்: (பக்கம் 63-ல் காண்க) .

இங்ங்ணம் நாயன்மார் வரலாறுகள் - சிற்பம், ஓவியம், மக்கட் பெயர்கள், விழாக்கள், திருமுறை ஒதல் இவற்றின் வாயிலாகச் சோழர் காலத் தமிழகம் முழுவதும் - சேக்கிழார்க்கு முன்னரே பேரளவு பரவியிருந்தன என்பதைச் சோழர் காலக் கல்வெட்டுகள் வாயிலாக நன்கறியலாம். இனி, நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை நல்கிய சோழர் கால இலக்கிய நூல்களைக் காண்போம்.