பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7.சேக்கிழார் தல யாத்திரை

முன்னுரை. சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் அப்பர். சம்பந்தர். சுந்தரர் செய்த தல யாத்திரை விவரங்களும் நாயன்மார் பிறந்த பதிகளைப் பற்றிய விவரங்களும், ஒவ்வொரு பதியின் அமைப்பு, இயற்கை வளம் முதலியனவும். நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்றளவும் உண்மையாக இருத்தலைக் காண, சேக்கிழார் நாயன்மார் சம்பந்தப்பட்ட பதிகளையும் சிவத் தலங்களையும் பிற இடங்களையும் நேரிற் சென்று கண்டவராவர் என்பது தெள்ளிதிற் புலனாகும். அவர் அமைச்சரான பிறகே இத்தகைய யாத்திரை எளிதாக இருந்திருத்தல் கூடும், அமைச்சர் தமது ஆணைககு உட்பட்ட நாடு'முழுவதும் சுற்றிப் பார்க்கக் கடமைப்பட்டவராவர். அங்ங்னம் சுற்றுகையில், இயல் பாகவே சைவப் பிறப்பும் சைவ சமயப் பற்றும் பேரளவுகொண்டு, திருமுறைகளை நன்கு பயின்ற சிறந்த இலக்கண - இலக்கியப் புலவரான சேக்கிழார், நாயன் மாருடன் தொடர்பு கொண்ட பதிகளையும் இடங்களையும் அவர்களுடைய யாத்திரை வழிகளையும் பிற செய்தி களையும் மிகவும் நுட்பமாகக் கண்டும் ஆங்காங்கு இருந்த வல்லார்வாய்க்கேட்டும் குறிப்புகள் தொகுத்திருத்தல் வேண்டும் என்று நினைத்தல் பொருத்தமே ஆகும். இங்ங்னம் சேக்கிழார் தல யாத்திரை செய்து, போதிய செய்திகள் அனைத்தும் தொகுத்த பின்னரே பெரிய புராணம் பாடியிருத்தல் வேண்டும். இவ்வாறு சேக்கிழார் தல யாத்திரை செய்தனர். என்பதைப் பல சான்றுகள் கொண்டு காட்டலாமாயினும் இடமஞ்சிச் சில காட்டுவோம்.