பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

81

அவரை வேண்டியிருத்தல் இயல்பே.

சேக்கிழார் அவ்வேண்டுகோளுக்கு இணங்கிக் கூத்தப்பிரான் எழுந்தருளியுள்ள சிதம்பரத்தை அடைந்து, அப்பெருமானை வேண்டி 'உலகெலாம்' என்று விண்வழி எழுந்த தொடரையே தமது நூலுக்கு முதலாகக்கொண்டு நூல் பாடத் தொடங்கி யிருக்கலாம். இடையிடையே உண்டான ஐயங்களை அவ்வத்தலம் சம்பந்தமான உத்யோகஸ்தர் வாயிலாகவும் சிற்றரசர் வாயிலகாவும் ஆங்காங்கு இருந்தபெரும் சைவப்புலவர் வாயிலாகவும் போக்கிக்கொண்டு தமது நூலைப் பாடி முடித்திருக்கலாம். இவ்வாறின்றி, அரசன் வேண்டுகோள்மீதே சேக்கிழார் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து ஆராய்ந்து, தம் ஆராய்ச்சியிற் போந்த முடிவுகளையும் நூல்களிற் கண்ட செய்திகளையும் சேர்த்துப் புராணம் பாடி முடித்தார் எனக்கொள்வதும் தவறாகாது.

அவரது பெரியபுராணத்தைக் கூர்ந்து கவனிப்பின், அவர் (1) தமிழ்நாடு முழுவதும் சுற்றி நாயன்மார் பற்றிய குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும், (2) ஆங்காங்கு இருந்த சிற்றரசர், அறிஞர் முதலியோரைக் கேட்டும் கல்வெட்டுகளைப் படித்தும் குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகள் ஆகும். இவை இரண்டையும் பற்றிய குறிப்புகளைச் சுருக்கமாக அடுத்த இரு பிரிவுகளிற் காண்போம்.