பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

87

தில்லையிலிருந்து திருமுதுகுன்றம் போகும்பொழுது நிவாநதிக்கரைமீது மேற்கு நோக்கிச் சென்றார் வடகரை மாந்துறை பணிந்து பிற தலங்களையும் தரிசித்தார். பின்னர் மழநாட்டுப் பொன்னி வடகரைமீது போய்த் திருப்பாச்சில் ஆச்சிரமம் அடைந்தார் திருஈங்கோய் மலையைப் பணிந்த பிறகு கொங்குநாட்டு மேற்குப் பகுதி நோக்கிச் சென்றார். சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் சேரநாடு செல்லப் புறப்பட்டு ஆரூரிலிருந்து மேற்குப் பக்கம் சென்றார் காவிரித் தென்கரை வழி போய்ச் சிவபிரான் கோவில்களைப் பணிந்து திருக்கண்டியூரை'அடைந்தார்: வட கரையில் திருவையாறு எதிர்ப்பட்டது.

இங்ஙனம், நாயன்மார் யாத்திரை செய்த ஆற்றின் பெயர்களையும் கரைகளையும், அக்கரைகளில் அவர்கள் தரிசித்த கோவில்களையும், அக்கரைகளின் வழியே அவர்கள் சென்ற நாடுகளையும் சேக்கிழார் மிகவும் தெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அப்புலவர் பெருமானது தமிழகத்து நில அமைப்பு அறிவு எந்த அளவு தெளிவாக இருந்தது என்பதும், அத்தகைய தெளிந்த அறிவிற்கு அவரது தல யாத்தில்ரையே சிறந்த காரணம் என்பதும் நன்கறியலாம்.

நாயன்மார் பதிகள்

ஆதனுர்:நந்தனார்.ஆதனூரைச் சேர்ந்தவர்.அவரது ஆதனுர் இன்னது என்று சேக்கிழார் குறிக்க வேண்டும். ஆயின் தமிழ் நாட்டில் ஆதனூர்கள் பல சேக்கிழார் காலத்திலேயே இருந்தன என்பது கல்வெட்டுகளாற் புல்னாகின்றது. திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர் முதலிய மாவட்டங்களில் ஆதனுர்கள்