பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 எஸ். எம். கமால் சிறை பழஞ்சிராய் என்ற பெயரிலும் வழக்கில் இருந்து வரு கின்றது. இதற்கு ரெகுநாத சமுத்திரம் என்ற பெயரும் இருந்து வந்துள்ளது. இதன் எல்கை மாலில் குறிப்பிடப்பட்டுள்ள பழு பாகல் ஊரணி, பளுவா ஊரணி என்றும் கொம்பிடா மருதுர், கொம்பிடைமதுரை என்றும் வழங்கி வருகின்றன. இந்த கிராமங்கள் இன்றைய இராமநாதபுரம் வட்டத்தில் கிழக்கரைக் குத் தென்மேற்கே அமைந்துள்ளன. அங்கு பள்ளி வாசல் தோட்டம் என்று (வரி 47) குறிப்பிட்டிருப்பதால் அங்கு முன்னர் இஸ்லாமியரது குடியிருப்பு இருந்து வந்தது புலனாகிறது. இதனை, சேகு இப்ராஹிம் மரைக்காயர் தோட்டம், குட்டி ஆலிப்பிள்ளை தோட்டம் சர்க்கார் ராவுத்தன் தோட்டம் என்ற சொற்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இப்பொழுது அங்கு இஸ்லாமியர்கள் குடியிருப்பு இல்லை. இன்னொரு முக்கியமான செய்தி. இந்தப்பகுதியில் புகையிலைப் பயிர் விளைச்சல் செய்யப் பட்டதை தன்மமுக்கந்தர் புகையிலைத்தோட்டம், புகையிலைத் தொண்டாலி என்ற சொற்கள் இதனைக் குறிப்பிடுகின்றன. திருமாலாகிய பெருமாளை முகுந்தன் என்று அழைப்பது உண்டு. மருத நிலத்தின் இந்த கடவுளை வழிபடும் யாதவர்கள் தங்கள் பெயரின் இறுதியில் முக்கந்தர்' என்ற விகுதி இணைத்து வழங்குவது அண்மைக்காலம் வரை இந்தப்பகுதியின் பழக்கமாக இருந்தது. முகுந்தன் என்ற வடசொல் மூக்கந்தன் என்று தமிழில் வழங்கி வந்துள்ளது. நன்கு பாதுகாப்பு வேலி அடைப்புடன் கூடிய தோட்டத்தில் போக்குவரத்திற்காக ஒரு சிறு நுழைவுப்பாதை அமைப்பது உண்டு. அதனை இந்தச் செப்பேட்டில் தொண்டு என்றும் தொண்டாலி என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தொண்டு வழி தொண்டாலி ஆகியுள்ளது. முன்னர் இந்தப் பகுதி காடும் செடியும் மிகுந்து மயில்கள் பெருத்த பகுதியாக இருந்துள்ளதை மயிலாடுதிடல்' என்ற சொல் (வரி 94) புலப்படுத்துகின்றது. மற்றும் குமாரசேர்வைக் காரர் நாளையில் எடுத்தேறின உண்டுகால், வெங்கலமுடைய பிள்ளை கண்ட வயக்கால் என்ற தொடர்கள் அன்று அரசப் பணியில் இருந்த குமார சேர்வையும், வெங்கலமுடைய பிள்ளை யும் இந்த ஊரின் குடிநீர், நீர்ப்பாசன வசதிக்கு ஆற்றின பணி யினைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன.