பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சேதுபதி மன்னர் வரலாறு

இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாசித் திருவிழாவிற்கென முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் புதிய தேர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி அந்தத் தேரின் ஓட்டத்திற்கு முதலில் வடத்தையும் பிடித்துக் கொடுத்தார். அதே கோயிலில் இராமநாத சுவாமியும் அம்பாளும் நாள்தோறும் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் பள்ளியறைக்குச் சென்று உறங்குவதற்கு 1600 வராகன் எடை நிறையில் ஓர் வெள்ளி ஊஞ்சலையும் இந்த மன்னர் செய்து வழங்கினார்.

சேதுபதிகளின் வரலாற்றில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதசுவாமி வெள்ளிக் கிழமை தோறும் இரவு நேரத்தில் பவனி வருவதற்காக, முழுவதும் வெள்ளியிலான தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இதே மன்னர் காளையார் கோவில், மயிலாப்பூர் ஆகிய திருக்கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி எழுந்தருள்வதற்காக அழகிய பல்லக்குகளையும் செய்து வழங்கியுள்ளார். இவைகளைப் போன்று சேதுபதி மன்னர்கள் பல திருக்கோயில்களுக்குப் பல அழகிய வாகனங்களையும் செய்து வழங்கியுள்ளனர். மற்றும் இராமேஸ்வரம், திரு உத்திர கோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய திருக்கோயில்களில் நாள் தோறும் சிறப்பான நைவேத்தியங்கள் செய்து சுவாமிக்குப் படைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.

மேலும் திருப்புல்லாணித் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர் செய்துள்ளார். நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் கொடி மண்டபத்தையும், காளையார் கோவில் காளைநாதர் சுவாமி திருக்கோயிலையும், மகா மண்டபத்தையும் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் நிறைவேற்றி வைத்துள்ளார். இராமேஸ்வரத் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரெகுநாத சேதுபதி, முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் வழிவழியாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரகார அமைப்புக்களையும், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அணுக்க மண்டபம் ஆகியவற்றையும் அமைத்துத் தங்களது தெய்வ சிந்தனையையும் சமயப்பற்றையும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் திருக்கோயில்களுக்கு வழங்கிய சர்வ மானிய கிராமங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.