பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

69

மீண்டும் சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என நம்பினர். இதனால் அந்தப் பகுதியில் ஆங்காங்கு குடிமக்களிடமிருந்து தீர்வையாகப் பெற்றுச் சேமித்து வைத்திருந்த நெல் கொட்டாரங்கள் அனைத்தையும் மக்கள் கொள்ளையிட்டனர். தகவலறிந்த கலெக்டர் லூசிங்டன் அந்தப் பகுதி நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இயலாதவாறு செய்திப் போக்குவரத்துகளையும் துண்டித்து விட்டனர். காமன்கோட்டை வழியாக இராமநாதபுரத்திலிருந்து கர்னல் மார்ட்டின்ஸ் அழைத்துச் சென்ற போர் வீரர்களது அணியும் கமுதிக்குச் செல்ல முடியாமல் திரும்பிவிட்டது இதனால் மிகவும் கலவரமடைந்த இராமநாதபுரம் கலெக்டர் பாளையங்கோட்டைக்கு அவசரத் தபால்களை அனுப்பி அங்கிருந்து கும்பெனியார் அணிகள் முதுகளத்துர் பகுதிக்குப் புறப்பட்டு வருமாறு செய்தார். கும்பெனி அணிகளுக்கும். கிளர்ச்சிக்காரர்களுக்கும் கமுதி. கிடாத்திருக்கை, முதுகளத்தூர், கருமல் ஆகிய பகுதிகளில் நேரடியான மோதல்கள் ஏற்பட்டன. 42 நாள்கள் இந்தக் கிளர்ச்சியினால் முதுகளத்துர் கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றதுடன் கும்பெனித் துருப்புக்களையும் எதிர்த்துப் போராடினார். இந்தக் கிளர்ச்சிகளின் கொடுமுடியாக நடந்த கமுதிக் கோட்டைச் சண்டையில் எதிர்பாரா நிலையில் எட்டையபுர வீரர்களும் சிவகங்கைச் சீமை வீரர்களும் கலந்து ஆங்கிலேயருக்கு உதவியதன் காரணமாக கிளர்ச்சிக் காரர்களுக்குக் கடுமையான சேதமும் தோல்வியும் ஏற்பட்டன. கமுதிக் கோட்டையிலிருந்து வடகிழக்கேயுள்ள கீழ்க்குளம் காடுகள் வரை கிளர்ச்சிக்காரர்களது சடலங்கள் சிதறிக் கிடந்தன. இந்தக் கிளர்ச்சியில் தீவிரப் பங்கு கொண்ட சிங்கன்செட்டி, ஷேக் இபுராஹிம் சாகிபு என்ற அவரது தோழர்கள் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்கள் கை ஓய்ந்ததால் அந்தப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த கும்பெனியார் முயன்றனர். மயிலப்பன் சேர்வைக்காரரைத் தவிர அனைத்துக் கிளர்ச்சிக் காரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியில்லாமல் மயிலப்பன் சேர்வைக்காரர் மாறு வேடத்தில் சோழநாட்டிற்குச் சென்றார். எட்டு மாதங்கள் கழித்து மயிலப்பன் சேர்வைக்காரர் மறவர் சீமைக்குத் திரும்பினார். அதுவரை கும்பெனியாருக்கு உற்ற தோழர்களாக இருந்த சிவகங்கைப் பிரதானிகள் மருது சேர்வைக்காரர்கள் அப்பொழுது கும்பெனியாருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்ததை மயிலப்பன் உணர்ந்தார். அவர்களது வேண்டுகோளின்படி, அவர்களது அணியில் நின்று பாடுபட்டதுடன், பாஞ்சைப் பாளையக்காரர்கள், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது அந்நிய எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாகச்