பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சேரன் - செங்குட்டுவன்

துறவு பூண்டதற்குக் காரணம் யாது? சொல்லுக’ என்று கேட்டனன். தேவந்தியும், கணிகையர் குலத்து ளுயர்ந்தவளான மணிமேகலையின் துறவைக் கூறத்தொடங்கி– “அரசே! நின்வெற்றி பெருகுக: நின்னாடு வளஞ்சிறப்பதாக; கோவலனுக்கு மாதவிவயிற்றுதித்த மணிமேகலையானவள் கன்னிப்பருவமடைந்ததற்கேற்ற அறிகுறிகளெல்லாம் நிரம்பினளாயினும், காமக்குறிப்புச் சிறிதேனும் இல்லாதவளாயினள். அதனால், நட்டுவனார் கூத்து முதலியன பயில்வியாமையின் குலத்தலைவர்களாகிய செல்வர்கள் அவளைக் கொள்ளுதற்கு நினைந்திலர். இங்ஙனமாதலறிந்து மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, தன்மகள் மாதவிக்கு அவள் நிலைமை கூறி மனவருத்தமடையத் தாயின் கருத்தறிந்த அம்மாதவி, மணிமே கலையை உடனழைத்துக்கொண்டு அவளைக் கணிகையர் குலத்திற் புகவிடாது, மன்மதன் தானினைத்திருந்த எண்ணம் பழுதாகித் தன்கரும்பு வில்லையும் மலர்வாளிகளையும் வெறுநிலத் தெறியும்படி, மணிமேகலையின் கூந்தலை மாலையுடன் களைவித்து இந்திரவிகாரமடைந்து பௌத்ததருமத்தே சேர்த்தனள். இச்செய்திகேட்ட அரசனும் நகரத்தாரும், கிடைத்தற்கரிய நன்மணியைக் கடலில் வீழ்த்தவர் போலப் பெருந் துன்பமடைந்தனர். மணிமேகலை தன் வைராக்கியத்தைச் சங்கத்தாரான அறவணவடிகளிடம் சென்றுகூறிப் பிக்ஷணி யாயமர்ந்த செய்தியை, அவ்வடிகளே அன்போடும் எமக்குக் கூறினார். இவ்வாறு, இளம்பருவத்தே மணிமேகலை தன் அழகிய கோலத்தை அழித்துத் துறவு பூண்டனளாதலின், நான் கதறியழலாயினேன்” என்று முன்னடந்த வரலாறு களைத் தேவந்தி கூறிமுடித்தாள்.