பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

89

பின்னர்ச் சாத்தனென்னுந் தெய்வம் திடுக்கென்றேறியதனால் ஆவேசங்கொண்டு, அத்தேவந்தி, கூந்தல் குலைந்து விழவும், புருவந்துடிக்கவும், செவ்வாய்மடித்துச் சிரிப்புத் தோன்றவும், மொழிதடுமாறி முகம் வியர்க்கவும், செங்கண் சிவக்கவும், கைகளையோச்சிக் கால் பெயர்த்தெழுந்து, பலருமின்னதென்று தெரியவாராத அறிவுமயக்கமுடையவளாய் நாவுலர்ந்து தெய்வம் பேசும் பேச்சுக்களைக் கூறிக்கொண்டு, செங்குட்டுவன் திருமுன்பிருந்த மாடலனை நோக்கி “மாடல! யான் பாசண்டச் சாத்தன். இப்போது இத் தேவந்தியின் மேல் ஆவேசித்துள்ளேன். பத்தினிக்கடவுளின் பிரதிஷ்டையைத் தரிசிக்க வேண்டி இங்குவந்துள்ள மகளிருள்ளே அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும் ஆடகமாடத்துத் திருமால் கைங்கரியம் புரியும்[1] சேடக்குடும்பியின் இளம் பெண்ணும் ஈங்கிருக்கின்றனர். மங்கலாதேவியின் கோயிற் பக்கத்துள்ள மலையிடத்தே, மயிற்கல்லின் பிடர்த்தலையினின்றிழிகின்ற நீரால் நிரம்பும் பொய்கைகள் பலவற்றுள்ளே இடையிலிருப்பதும், சிறிய அழகிய கற்களோடு மாவைக் கரைத்தாலொத்து விழும் நீருடையதுமாகிய சுனையொன்றிற் புகுந்து நீராடுவோர் பண்டைப்பிறப்பின் செய்திகளை அறிந் தோராவர் என்பது பற்றி, அம்மங்கலாதேவிகோயிலின் வாயிலிலே நீ இருந்தபோது, அந்நீருள்ள கரகத்தை ‘இது நீ கொள்ளத்தக்க’தென்று நான் உன்பாற் கொடுத்தேனன்றோ


  1. சேடக்குடும்பி என்பதற்குத் திருவடி பிடிப்பான் என்று கூறு வர், அரும்பதவுரையாசிரியர் (பக்-75). திருவடியிடிப்பான் - அருச்சகனென்பது நடுவிற்கோயிற் றிருவடி பிடிக்கும் ஸ்ரீதரப்பட்டனும் என்னும் சாஸனப்பகுதியால் தெரிகின்றது. (South Indian Inscriptions, Vol. III. p. 84.)