பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சேரன்-செங்குட்டுவன்

வஞ்சியிலிருந்த சிவாலயத்தைப்பற்றி ஒன்றுங் கூறநேராமற் போயினும், 'ஆனேறுயர்த்தோன்' 'செஞ்சடைவானவன்' 'உலகுபொதியுருவத் துயர்ந்தோன்' எனத் தம் தமயனாற் பக்திசெய்யப்பட்ட சிவபெருமானைச் சிறப்பித்தலால், அப்பெருமானுக்கு ஆலயமொன்று அந்நகரில் அமைந்திருந்ததாகக் கொள்ளத் தடையில்லை. ஆயின், அஃது, இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலே ஆதல் வேண்டும். இவ்வாலயம், கருவூர்த் திருவானிலை எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு, சோழர் சாஸனங்கள் பல கொண்டதாகவும் உள்ளது. காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு 'ஆனிலை' எனப் பெயர் வழங்கியதென்பர். இது பற்றியே, இக்கோயிற் சிவபிரான், பசுபதீசுவரர் எனப்பட்டார். இங்ஙனம் கருவூர்க்கு ஆனிலை என்ற பெயரிருத்தல் போலவே, அவ்வூரையடுத்துச் செல்லும் ஆம்பிராவதிக்கு, ஆன்பொருநை ஆன்பொருத்தம் எனப் பெயர்கள் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இனி பங்குனி விழவின் வஞ்சியொடு, உள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே எனவரும்

முன்னோர் கூற்றும், (தொல் - பொருளதி. பக். 320) "மதுரை ஆவணியவிட்டமே, கருவூர்ப் பங்குனியுத்திரமே, உறையூர் உள்ளிவிழாவே" எனவரும் இறையனார் களவியலுரை வாக்கியமும்,[1] கருவூரில் நிகழ்ந்த திருவிழா நாளொன்றைக் குறிப்பிடுதல் காணலாம். இக்குறிப்பின்படி, வஞ்சிப்பங்குனி விழா


  1. ௸ களவியல். 17-ம் சூத்திரவுரை காண்க; இதனுள், ‘உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே’ என மாறிக் காணப்படுகின்றது; ஆயினும் முன் காட்டிய பழையவாக்கிற்கிணங்கக் ‘கருவூர்ப் பங்குனியுத்திரமோ’ என்று பாடங்கொள்ளுதலே பொருத்தமாகும்.