பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சேரன் - செங்குட்டுவன்

நம்பத் தடையுமுண்டோ ? அன்றியும், அங்ஙனம் பாடியவர் தமது பெரும்பதவியையும் துறந்து நின்ற ராஜருஷியாயிருப்பது, அவரது வாக்கின் றூய்மையையே வற்புறுத்தவல்லது; “முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது - அடிகள் நீரே யருளுக” என்று, அவரது நடுநிலையைப் புகழ்ந்தனர் அவர்காலத்துப் புலவரொருவரும். இதற்கேற்ப, செங்குட்டுவன் வரலாறுபற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தைப் படித்து வருவோரெவர்க்கும் கற்பனைகள் கலவாதது அப்பகுதியென்பதும் விளங்கத் தடையில்லை. இனி, செங்குட்டுவனாலும் இளங்கோவடிகளாலும் நன்குமதிக்கப்பெற்றவரும் புலவர் பெருமானுமாகிய சாத்தனாரால் இயற்றப்பெற்ற மணிமேகலையென்னும் நூலினும், இளங்கோவடிகள் கூறியவற்றோடொத்த செய்திகள் பல காணப்படுகின்றன. இவற்றுடன், பழைய புலவர் பலரால் சேரவரசர் பெருமைகள் புகழ்ந்து கூறப்பட்ட பதிற்றுப்பத்து என்னுந்தொகை நூலுள், பரணர் பாடிய ஐந்தாம்பத்து முழுமையும் இச்சோனைப்பற்றி அமைந் துள்ளது. இப்பத்தினை, அப்புலவர் பெருமான் செங்குட்டுவன் முன்னர்ப்பாடி, அவனால் மிகுதியும் சம்மானிக்கப்பெற்றவர் என்பது, அதனிறுதி வாக்கியங்களால் தெளிவாகின்றது. ஆகவே, இவ்வாராய்ச்சிக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என்பவை சிறந்த சாதனங்களாகும். இவையன்றிச் சங்கச் செய்யுள்கள் சிலவும் வேறு புறக்கருவிகளும் உரியவளவில் உபகாரப்படுவன. இங்ஙனங் கிடைத்துள்ள சாதனங்களைக்கொண்டு செங்குட்டுவன் வரலாற்றையும், அவன் முன்னோரைப்பற்றிய செய்திகளையும், அவன்காலத்து அரசர் புலவர் சரிதங்களையும், மற்றும் பல நிகழ்ச்சி நிலைமைகளையும் இனி விரித்துக்கூற முயல்வோம்.