பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2-ம் அதிகாரம்

சேரவமிசத்தோர்.

செந்தமிழ்வேந்தர் மூவருள்ளே, செங்குட்டுவன் பிறந்த சேரவமிசத்தின் ஆதியுற்பத்தி எதனிலிருந்து தொடங்கியது என்பதை அறிதல் இப்போது அரிதாகும். சோழர் சூரிய வமிசத்தவராகவும்[1] பாண்டியர் சந்திரவமிசத்தவராகவும்[2] பண்டை நூல்களிற் கூறப்பட்டிருத்தல் போல, சேரவரசர் இன்ன மரபினரென்பதை நூல்கள் தெளிவுபடுத்தினவல்ல. பிற்காலத்தோர் இவ்வேந்தரை அக்கினிகுலத்தவராக வழங்கினரேனும், அக்கொள்கைக்குப் பழைய தமிழாதாரங் கிடையாதிருத்தல் வியப்பாயுள்ளது. ஆயினும், இவரை வானவர் என்ற பெயராற் பண்டை நூல்களும் நிகண்டுகளும் குறிக்கின்றன. இதனால், இவ்வமிசம் ஆதியில் தெய்வசம்பந்தம் பெற்றதென்றமட்டில் தெளிவாகும்.[3] சோழபாண்டியர் வமிசங்களின்ன என்பதைக் குறித்துப்போந்த பண்டை நூல்கள், சேரவமிசத்தின் மூலத்தை மட்டும் அறியாதொழிந்ததை நோக்குமிடத்து, அம்மரபு ஏனையவற்றினும் புராதனமான-


  1. மணிமேகலை. பதிகம். 9. சிலப்பதிகாரம். 11. 23
  2. சோழ பாண்டியரை, சந்திர வமிசத்து யயாதிவழியிலுதித்த ஒரு கிளையின ராக ஹரிவம்சம் கூறுமென்பர். ஆனால் இதற்குப் பண்டைத் தமிழாதாரம் காணப்படவில்லை.
  3. வானவர் (Celestials) என்ற பெயர் சீனர்க்கு இன்றும் வழங்கி வருதலால், சேரர் ஆதியில் சீன தேசத்தினின்று வந்தவராக ஸ்ரீ . வி. கனகசபைப்பிள்ளையவர்கள் கருதினர். (The Tamils 1800-years ago.)