பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

முடிவுரை


மலைநாடாண்ட சேரமான்கள் பலராவர். இவருள்ளே, திருமாலடியாராகிய குலசேகர ஆழ்வாரையும், சிவனடியாராகிய சேரமான் பெருமாள் நாயனாரையும் நம்மவரெல்லாம் நன்கறிவர். இத்தகைய தனித்தமிழ்வேந்தர்களது ஆட்சியிடமாய்ச் செந்தமிழ்ப்பயிர் செழித்துவளர்ந்த அம்மலைநாடானது பிற்காலத்தில் மாறிய நிலையை என்னென்பேம்! அச் சேரநாடு சில நூற்றாண்டுக்குள் பாஷையாலும் நடையுடைபாவனைகளாலும் வேறுபட்ட ஒரு தனித்தேசம் போல் இப்போது நிற்பது அதிசயமேயன்றோ? இவ்வாறாயினும், பழைய சேரவரசர் கிளைகள் மட்டும் இன்றும் அந்நாடாட்சி செய்து வருகின்றன. சோழ பாண்டிய வமிசங்கள் மறைந்துபோய்ப் பல நூற்றாண்டுகளாயினும், சேரமரபினர் சிலர் திருவனந்தபுரம் திருசூர்களைத் தலைநகர்களாகக் கொண்டு அரசியல் புரிந்து வருவது, தென்னாடு செய்த பாக்கியமே என்னலாம். இவர்களுள், திருவனந்தபுரவரசர் வஞ்சிபாலர் என்ற பட்டப்பெயரால் இன்றும் வழங்கப்பெற்று வருதல் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால், இவ்வேந்தர் வஞ்சிமாநகரையே தம் பூர்வராஜஸ்தலமாகக் கொண்டிருந்தவர் என்பது நன்கு விளங்கும். இவ்வமிசத்தரசரும், இவரால் ஆளப்படும் குடிகளும் பாஷைநடையுடை பாவனைகளால் வேற்றுநாட்டார் போல இக்காலத்தில் மாறி நின்றனராயினும், பழைய தமிழ் வழக்க ஒழுக்கங்களையும், சொற்பொருண்மரபுகளையும் அவரிடத்துப் போலச் செந்தமிழ்நாட்டு மக்களுள்ளும் நாம் காணமுடியாவென்றே சொல்லலாம். அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்.

முற்றும்.