பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

28


குட்டுவன் பட்டமெய்துவதற்கு முன்பு நிகழ்ந்த இளங்கோவின் துறவுவரலாறு வெளியாம். இங்ஙனம் துறவு பூண்ட பின், இளங்கோவடிகள் என வழங்கப்பெற்று, வஞ்சிமாநகரின் கீழ்பாலுள்ள 'குணவாயிற் கோட்டம்' என்ற விடத்தில் வசித்து வந்தனர்.[1] இவர், பெருந் துறவியாக இருந்தது மட்டுமன்றி, அக்காலத்திருந்த உத்தம கவிகளுள் ஒருவராகவும் விளங்கினர். தமிழைம்பெருங் காவியங்களுள் ஒன்றாகச் சிறப்பிக்கப்படும் சிலப்பதிகாரம் இவ்வடிகள் இயற்றிய தென்பதையும், அதன் சொற்பொருள் வளங்களையும் அறிந்து வியவாத அறிஞருமுளரோ? இந்நூலை அடிகள் பாடுதற்குக் கருவியாக நின்ற பெரும்புலவர், மதுரைக்கூலவாணிகன் சாத்தனார்[2] என்பவர். இப்புலவரைத் தலைமையாகக் கொண்ட அவைக்கண்ணே அடிகள் தம் நூலை அரங்கேற்றினர்.[3] அவ்வச் சமயநிலைகளையும், தமிழ் மூவேந்தர் பெருமைகளையும் நடுநிலைபிறழாது கூறிச்செல்வதிலும் இயற்கைச்சிறப்புக் களை எடுத்துமொழிவதிலும், உலகத்தின் தர்மங்களை உணர்த்துவதிலும் இவ்வடிகட்கிருந்த பேராற்றல் மிகவும் வியக்கற்பாலது. இவ்வடிகள் ஜைநமதத்திற் பற்றுள்ளவராகவே இவரது வாக்கின் போக்கால் உய்த்துணரப்படுமாயினும், வைதிகசமயத்தவராகக் கருதற்குரிய சான்றுகளுமுள்ளன.


  1. ‘குணவாயிற் கோட்டத் தரசு துறந் திருந்த-குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு’ என்பது பதிகம்.
  2. இவர் வரலாற்றை ‘இருபெரும் புலவர்’ என்னும் இந்நூற்பகுதியுட் காண்க.
  3. “உரைசா லடிக ளருள மதுரைக் - கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்.” (சிலப்-பதி. 88-9)