பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்.

25

பத்தால் தன்னைப் பாடியது கேட்டு மகிழ்ந்த செங்குட்டுவன், அவ்வந்தணர்க்குப் பெரும்பொருளோடு, இக்குட்டுவஞ்சோலையும் பரிசாக அளித்தானென்று அப்பத்தின் இறுதி வாக்கியங் கூறுகின்றது. இங்ஙனம் ‘மகனைப் பரிசளித்தான்’ என்பது, பரணரிடங் கற்று வல்லனாம்படி அவனைக் குருகுலவாசஞ் செய்ய நியமித்ததைக் குறிப்பது போலும். இக் குட்டுவஞ்சேரல் மேற்குறித்த கோப்பெருந்தேவியிடம் பிறந்தவனாதல் வேண்டும். இம்மகன் பட்டம் பெற்றபின்னர், முற்காலமுறைப்படி வேறுபெயரும் இவனுக்கு வழங்கியிருத்தல் கூடும். ஒருகால், சோழன் பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி— இவருடன் நட்புப்பூண்டிருந்த சேரமான் மாவெண்கோ என்பவன்,[1] இக்குட்டுவஞ்சேரலோ என்று கருதுதற்கும் இடமுண்டு.

செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்பவனென்றும், அவ் வம்மானுக்கு மகன் சோழன் - இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்றும் புலப்படுகின்றன. இதற்குற்ற காரணங்களைச் “செங்குட்டுவன் காலத்தரசர்” என்ற அதிகாரத்துள் விளக்கியுள்ளேம். இவ்வாறு பண்டை நூல்களாற் றெரிந்தவளவிற் செங்குட்டுவன் சுற்றத்தாரைப் பின்னர் வருமாறு தொகுத்துக் காட்டலாம். இவரைப்பற்றிய விவரங்களை ஆங்காங்கு அறிந்து கொள்க.



  1. புறநானூறு-367.