பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்ச்செயல்கள்.

29

(2) இனிக் கொங்கர் செங்களத்தே செங்குட்டுவன் ஒரு போர் நடத்தியதாகத் தெரிகிறது. இதனில், சோழ பாண்டியருஞ்சேர்ந்து எதிர்த்தனரென்றும், அவரது கொடி படைகளையெல்லாம் கைக்கொண்டு, அப்போரில் யாவரும் புகழத்தக்க பெரிய வெற்றியைச் செங்குட்டுவன் பெற்றன னென்றும் சிலப்பதிகாரங் கூறுகிறது.

“நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
கொங்கர் செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தன ராயினு மாங்கவை

திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன.” (சிலப். 25: 152-55)

எனக்காண்க. கொடுகூர் என்ற நகரம் இக்கொங்கர் போரி லே செங்குட்டுவனால் அழிபட்டதாகும். “கொடு கூரெறிந்து” என்பது பதிற்றுப்பத்து . கொடுகூர் நாடு என்பதொன்று , இப்போது மைசூரிராஜ்யத்தின் தென்பகுதியாகிய பன்னாடு விஷயத்தின் ஒரு பிரிவாகவும், சேரமானுக்குரிய பூமியாகவும் இருந்ததென்று பழைய சாஸனமொன்று[1] கூறுகிறது. இக் கொடுகூர் நாட்டின் தலைநகரே சேரனால் அழிக்கப்பட்டதாதல் வேண்டும்.

(3) இனிப் பாணரென்ற புலவர் பெருமான் பாடிய ஐந்தாம்பத்தில் மிகுதியாகப் பாராட்டப்படும் செங்குட்டுவன் வீரச்செயல்கள், அவன் கடலில் சைந்நியங்களைச் செலுத்தியதும், பழையனென்பவனை அழித்ததுமாம். இவற்றுள்


  1. இரவிதத்தனது குமாரலிங்க சாஸனம். இக்கொடுகூர் நாடு சேரனுக்குரியதாயிருந்ததென்பது,ஷை இரவிதத்தன் என்றசிற்றரசன். சேரன் அனுமதி பெற்றுப் பிராமணனொருவனுக்கு அந்நாட்டிலுள்ள கிராமமொன்றைத் தானஞ்செய்தான் என்பதனால் அறியப்படும். (Indian Antiquary Vol. XVIII, 1889. p. 367.)