பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சேரன் - செங்குட்டுவன்

அலைத்து நின்ற சோழவமிசத்தவர் ஒன்பதின்மரை உறை யூர்க்குத் தென்பக்கத்துள்ள நேரிவாயில்[1] என்ற ஊரில் நிகழ்ந்த போரிலே ஒருபகலிற்கொன்று, தன் மைத்துனச் சோழனைப் பட்டத்தில் நிறுவினன் செங்குட்டுவன். தன் தமையனது இவ்வரிய செயலை வியந்து:—

“மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பின ரொன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கு மாண்பின ராதலின்
ஒன்பது குடையு மொருபக லொழித்தவன்

பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்.” (சிலப். 27: 118-23.)

என இளங்கோவடிகளே கூறுதல் காண்க. “ஆராத் திருவிற் சோழர்குடிக் குரியோர்—ஒன்பதின்மர் வீழ வாயிற் புறத் திறுத்து” என்றார் பதிற்றுப்பத்தினும். செங்குட்டுவன் மைத்துனனாகிய இவ்விளஞ்சோழன் பெயர் பெருங்கிள்ளி யென்பது சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரையாற் புலப்படும்.[2] இன்னும் இதன் விரிவை ‘செங்குட்டுவன் காலத்தாசர்’ என்ற பகுதியிற் காண்க. இவ்வரலாறுகளால், செங்குட்டுவ னிகழ்த்திய போர்களிற்சில பொதுவாக ஒருவாறு அறியப்படுதல் கண்டுகொள்ளலாம்.


  1. ‘நேரிவாயில் - உறையூர்த்தெற்கில்வாயிலதோர் ஊர்’ என்றார். சிலப்பதிகார அரும்பதவுரைகாரர் (பக் - 73). இப்பெயர் கொண்ட ஊர், உறையூரைச் சூழ்ந்த நாட்டுக்குப் பிற்காலத்து வழங்கிய பெயராகிய க்ஷத்திரியசிகாமணி வள நாட்டைச் சார்ந்திருந்ததென்பது, “க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டு நேர்வாயிலுடையான் ...வானவன்பல்லவதரையன்” என்னும் சாஸனப்பகுதியால் விளங்கும். (South Indian Inscriptions. Vol. III. No. 21.)
  2. இவனைப் பெருநற்கிள்ளி என்பர், அடியார்க்கு நல்லார். (சிலப். பக். 32)