பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரன்-செங்குட்டுவன்

முடையதாகும்’ என்று கூறினர். கூறக்கேட்ட செங்குட்டுவன் பொதியமலையிற் கல்லெடுத்துக் காவிரித்துறையில் நீராட்டுதல் பெருவீரராகிய சேரவமிசத்தவர்க்குச் சிறப்பைத் தருஞ் செய்கையன்று ; ஆதலால், இமயத்திலிருந்து கல்லெடுப்பித்துக் கங்கையில் நீராட்டி வருதலே நம் பெருமைக்கேற்றதாம். இமவான் நம் விருப்பத்துக் கிணங்கானாயின்[1] இங்கு நின்றும் வஞ்சிமாலை சூடிச் சேனைகளுடன் சென்று புறத்துறைக்கமைந்த நம் வீரச்செயல்கள் பலவற்றையும் ஆங்குக் காண்பிப்பேன்’ என்று வீராவேசத்துடன் கூறினான்.

இங்ஙனம் செங்குட்டுவன் கூறிய வீரமொழிகளைக் கேட்ட வில்லவன் கோதை என்ற சேனாபதி அரசனை வாழ்த் திக்கொண்டு கூறுவான்:—“வேந்தர்வேந்தே! நும்மையொத்த வேந்தரான சோழபாண்டியர் நும்மோடு பகைத்துக் கொங்கர்போர்க்களத்தே தம் புலிக்கொடியையும் மீனக் கொடியையும் யுத்தகளத்திலிழந்து ஓடினராயினும், அச்செய்தி திக்கயங்களின் செவிவரை சென்று பரவலாயிற்று. கொங்கணர் கலிங்கர் கருநடர் பங்களர் கங்கர் கட்டியர் வட வாரியர் இவருடன் தமது தமிழ்ப்படை கலந்துபொருத செருக்களத்தில் தாம் யானையை விட்டுப் பகைவரை யழித்த அரியசெய்கை இன்னும் எங்கள் கண்களை விட்டு நீங்கவில்லை. அன்றியும் எம் கோமகளாய் விளங்கிய[2] தம்தாயின் சிலையைக்


  1. அப்பக்கத்தவர் நங்கருத்துக் கிணங்காது தடுத்து நிற்பராயின் என்பது கருத்து.
  2. “எங்கோமகளென்றது செங்குட்டுவன்மாதாவை; இவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை” என்பர், அரும்பதவுரையாசிரியர். இவ் வாக்கியத்தினின்று, செங்குட்டுவன் தன் தாயின் சிலையையன்றி அவளையே உடனழைத்துச்சென்று நீராட்டுவித்தான் என்பதும் அவ்வுரையாசிரியர் கருத்தாகத் தெரிகின்றது.