உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சேரன்-செங்குட்டுவன்

கேட்ட செங்குட்டுவன் மகிழ்வுற்று, உடனே தன் வாளினையுங் குடையையும் அந் நன்முகூர்த்தத்தில் வடதிசைப் பெயர்த்து நாட்கொள்ளும்படி ஆஞ்ஞாபித்தனன். ஆணை பிறந்ததும், போர்வீரரது ஆரவாரத்தோடு முரசங்கள் பூமி அதிரும்படி ஒலித்தன. பகைவர்க்கு வேதனை விளைக்குஞ் சேனைகள், மணிவிளக்குகளுடனும் துவசங்களுடனும் முன் செல்லவும், ஐம்பெருங்குழுவும்[1] எண்பேராயமும் அரசாங்கத்தை நடத்தும் கருமவினைஞரும் கணக்கியல்வினைஞரும் தருமவினைஞரும் தந்திரவினைஞரும் தம் அரசனான ‘செங்குட்டுவன் வாழ்க’ என்று கூறவும், பட்டவர்த்தனயானையின் பிடரிமேல் ஏற்றப்பட்ட அரசவாளும் வெண்கொற்றக்குடையும் வஞ்சிப்புறத்துள்ள கோட்டையிற் புகும்படி செய்து செங்குட்டுவன் தன்னரசிருக்கையை யடைந்தான். அன்றிரவில் போர்விருப்பத்தாற் களிப்புற்றுத் தன்னுடன் வருதற்கிருக்கும் தானைகளுக்கும் தானைத்தலைவர்க்கும் பெருஞ்சோறளித்துபசரித்து உற்சாகப்படுத்தி, மற்றொரு வேந்தனைக் கொற்றங்கொள்ள நிற்கும் தன் கொள்கைக்கேற்ப, வஞ்சிமாலையை மணிமுடியிலணிந்து மறுநாட்காலையில் யாத்திரைக்குச் சித்தமாயிருந்தனன், செங்குட்டுவன். அன்றிரவு இங்ஙனம் கழிந்தது.

பொழுது விடிந்ததும், அரண்மனையிலே அரசரிடுதற்குரிய திறைகொணர அழைக்கும் காலை முரசம் முழங்கியது.


  1. ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூது வர், சாரணரென்போர். எண்பேராயத்தை, ‘கரணத் தியலவர் கரும விதிகள், கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிப்படைத் தலைவர், யானை வீரரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப’ என்பதனாலறிக.