வடநாட்டியாத்திரை
73
ஒருங்கு நீங்கத் தன்னுடம்பையே அரிந்து தலையிற்புகுந்தோனது[1] செங்கோலும், மாறுங்காலமும் உண்டாமோ? காவிரியாற் புரக்கப்படும் சோணாட்டுவேந்தற்கு அத்துன்பக்காலத்துங் கேடில்லை’ என்று கூறினன். இவ்வாறு மாடலன் சொல்லக்கேட்டுச் செங்குட்டுவன் மகிழ்வுற்றுத் தன்னிறையளவாக ஐம்பது துலாபாரம் பொன்னை அம் மறையவனுக்குத் தானஞ்செய்து வெகுமானித்தனன். இது முடிந்ததும் சேரர் பெருமான் தன் யாத்திரைக்கு உதவிபுரிந்த ஆரியவரசராகிய கன்னர் நூற்றுவரையும் அவருடைய வளமிகுந்த நாட்டுக்குச் செல்லுமாறு விடுத்துப், பின் தன் தூதுவராயிரவரை அழைப் பித்துத் தமிழரது பேராற்றலையறியாது போர்க்கோலங்கொண்டுவந்து தோற்றுத் தாபதவேடம் பூண்டொளித்த இராசகுமாரரைத் தமிழரசரான சோழபாண்டியர்க்குக் காட்டிவருமாறு ஆணையிட்டு அவர்களை முன்னதாகப் பிரயாணப்படுத்தி அனுப்பிவிட்டுப் பின் தன் சிரமம் நீங்கப் பள்ளி மேவித் துயில் கொள்வானாயினன். இங்கு இவ்வாறாக :—
சேரராஜதானியாகிய வஞ்சிமாநகரிற் செல்வமிகுந்த அரண்மனையுள் வானளாவிய அந்தப்புரத்தே, முத்துக்களாலாகிய சல்லியும் தூக்குமிவைகளால் முழுதும் வளைக்கப்பட்டதும் விசித்திரமான மேற்கட்டியமைந்ததும் மணிநிரைகளை இடையிடையே வகுத்து வயிரமழுத்தப்பெற்ற பொற்ற கட்டினொளி ஒழுகப்பெற்றதும், வேலைப்பாடுமிக்க புடைதிரண்ட பொற்காலையுடையதுமான அழகிய பெரிய அமளிக்கட்டிலின்
- ↑ சிபிச்சக்ரவர்த்தி; முன்னவனும் இவனும் சோழவமிசத்தலைவர்களாதலால், இவர்கள் செயல்களைச் செங்குட்டுவனுடைய மைத்துனச்சோழன் மேல் ஏற்றியுபசரித்தாரென்க.