பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 129



விரும்பியிருக்கின்றாய்; நின் போர்வினையால் நாடுகள் அழிந்து பாழ்படுகின்றன; நாடுகளில் மக்கள் இனிதிருந்து வாழ்தற்கு ஏற்ற வாய்ப்புப் போர்வினையால் கெடுகிறது; அதனால் நாட்டின் பகுதிகள் பலவும் அழிவுறுகின்றன. போர் நிகழ்தற்கு முன் அந் நாட்டு நீர்நிலைகளில் தாமரை மலர், நெல்வயல்களில் நெய்தல் பூப்ப, நெற்பயிர் வளமும் வளர்ந்து விளைந்தன; நெல்லரிவோர் குயம் நெற்றாளை அரிய மாட்டாது வாய்மடங்கின ; கரும்பின் எந்திரம் கரும்பின் முதிர்வால் பத்தல் சிதைந்து வருந்தின; அந் நிலையைக் கண்டோர் இப்போது கை பிசைந்து புடைத்து வருந்த, போர்வினையால் அழிந்து மாட்சி இழந்தன; இவற்றை நீ எண்ணுதல் வேண்டும். இந் நிலையில் கணவனை இழந்த மகளிர் கையற்று வருந்தும் காட்சி நெஞ்சிற் பல நினைவுகளை எழுப்பு கின்றது. நின் திருநகர்க்கண் உறையும் நின் காதலி, போர்த்துறை மேற்கொண்டு பாசறை யிருப்பிலே நீ கிடத்தலால், நின்னைக் கனவின்கண் கண்டு இன்புறுவது ஒன்றைத் தவிர வேறு இன்பம் காணாது வருந்தி உறைகின்றாள்; அவளை நினையாது இருப்பது முறையன்று” என்று சொல்லி, நெடுஞ்சேரலாதன் உள்ளத்தெழுந்த மறவேட்கையை மாற்றினார். இவ்வகையால் அவனது உள்ளத்தை அறத் துறையில் ஒன்றுவித்து நாட்டில் அமைதி நிலவச் செய்து மக்களது வாழ்வில் நிலைத்த இன்பம் செய்யும் புலமைப்பணியில் கண்ணனார் பெரிதும் உழைத்துப் பயன் கண்டார். அவரது புலமை நலம் கண்டு வியந்த வேந்தன் அவர்க்கு மிக்க சிறப்புகளைச் செய்தான். அந் நாட்டில் இன்றும்