பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 205



நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள், எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லை போலும்” என்று பேசிக் கொண்டனர்; அச் செய்தியைச் செங்குட்டு வனுக்கு அப் பகுதியிலிருந்து வந்த மாதவர் சிலர் தெரிவித்தனர். அதனால், அவ் வடவாரிய வேந்தரின் செருக்கை அடக்குதற்கு இதுவே ஏற்ற செவ்வி எனச் செங்குட்டுவன் கருதினான்.

கணிகள் கூறிய நன்னாளில் சேரர் பெரும்படை இமயம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நூற்றுவர் கன்னர் வழியிற் குறுக்கிட்டு ஓடிய ஆறுகளைக் கடத்தற்கு வேண்டும் துணை புரிந்தனர். வடவாரிய நாட்டில் கனகன் விசயன் என்ற இரு வேந்தர்கள், உத்தரன், விசித்திரன், உருத்திரன், பயிரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய வேந்தர்களைத் துணையாகக் கொண்டு பெரும்போர் உடற்றினர்; அப்போர் பதினெட்டு நாழிகை நடந்தது; ஆரிய மன்னர் படை அழிந்து மாறிப் புறந்தந்து ஓடினர். கனகனும் விசயனும் சிறைப்பட்டனர். இமயத்தில் கண்ணகி பொருட்டு எடுத்த படிமக் கல்லை அக் கனக விசயர் முடியில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து சிறப்பித்துக்கொண்டு செங்குட்டுவன் சேரநாடு வந்து சேர்ந்தான். கனக விசயர் வஞ்சிநகர்ச் சிறைக் கோட்டத்தே இருந்தனர். பின்னர்க் கண்ணகியின் உருவமைந்த கோயிலுக்குக் கடவுள் மங்கலம் செய்தான். தமிழ்நாட்டினின்றும், ஈழம் முதலிய நாட்டினின்றும், பிறநாடுகளிலிருந்தும் வேந்தர் பலர் அவ் விழாவுக்கு வந்திருந்தனர். கனக விசயரையும் சிறை நீக்கித் தன்