பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 சேர மன்னர் வரலாறு



பெருங் கிளர்ச்சி தோன்றிற்று. யானைமேல் இருந்த தலைவன் அதனை அடக்க முயன்றும் அஃது அடங்காது ஒரு நெறியின்றி ஓடத்தலைப்பட்டது. சூழ்வரும் பரிக்கோற்காரும் படைவீரரும், மிகைசெய்த வழித் தன்னைக் கொல்வர் என எண்ணாது, களிறு மதங்கொண்டு திரிவது இருவர்க்கும் புலனாயிற்று. இதனை அறிந்த கருவூர்ப்படை, மத களிற்றின் வரவு போர் குறித்ததாகலாம் எனக் கருதி மேல்வரும் களிற்றையும் உடன் வரும் படைவீரரையும் தாக்குதற்கு அணிகொண்டு நிற்பதாயிற்று. சோழர் தலைவனுடைய யானை மதஞ் செருக்கிக் கருவூர் எல்லையை நோக்கிச் சென்றமை அந்துவனுக்குத் தெரிந்தது. சோழர் படை, கருதாது அலமருவதும், கருவூர்ப் படை, இரை வரவு காணும் புலிக்கணம் போல் போர் குறித்து நிற்பதும் அந்துவன் - சேரலுக்குத் தெரிந்தன. இதற்குள், யானை மேல் உள்ள தலைவனுடைய தோற்றம் சிறிது புலனாயிற்று. முடமோசியாரை நோக்கி, “இதோ களிற்றின் மேல் கருவூரிடம் செல்வோன் யாவனாகலாம்” என வினவினன். மோசியார், மனம் வருந்திக் களிற்றின் மேல் செல்பவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி; அக் களிறு, “முந்நீர் வழங்கும் நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் படைக்கடல் நடுவேயுளது ; சுறாமீன் கூட்டம் போல வாள் வீரர் மொய்த்திருப்பதை அறியாது மைந்து பட்டது; அவன் நோயிலனாகிப் பெயர்கதில் அம்ம[1]” என்று மொழிந்தனர்.


  1. பறம். 17.