பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக் கடுங்கோ வாழியாதன் 243


“செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்றுமன்[1]” என வேந்தராலும், உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்[2]” என்று சான்றோர் களாலும், “பொய்யா நாவிற் கபிலன்[3]” என நல்லிசைப் புலமை மெல்லியலாராலும் புகழ்ந்தோதப்படும் பெருஞ் சிறப்புற்று விளங்கியவர் கபிலர்.

கபிலர் சேர நாட்டுக்குப் புறப்பட்ட போது, செல்வக் கடுங்கோ வஞ்சி நகரில் இல்லை; நாட்டில் சிற்றரசர் சிலரிடையே நிகழ்ந்த போர்வினை குறித்துச் சென்று பாசறையில் தங்கியிருந்தான். கபிலர் சென்றடைந்த போது போர் முடிந்துவிட்டது. பொருத வேந்தர் கடுங்கோவைப் பணிந்து திறை நல்கினர். போர் வினையில் புகழ்பெற்ற தானை மறவரும் போர்க்களம் பாடும் பொருநர், பாணர், கூத்தர், புலவர் முதலிய பரிசிலர் பலரும் வேந்தன்பால் பரிசில் பெற்றனர். அவனது அத் திருவோலக்கத்துக்குக் கபிலர் வந்து சேர்ந்தார். அவரது வருகை கேட்ட சேரமான் மகிழ்ச்சி மீதூர்ந்து, காலின் ஏழடி முன் சென்று வரவேற்று, அன்பும் இனிமையும் கலந்த சொல்லாடி மகிழ்ந்தான்.

பின்னர், அவன் வேள்பாரியின் புகழையும் மறைவையும் கபிலர்க்கு உண்டாகிய பிரிவுத் துன்பத்தையும் பிறவற்றையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு, “சான்றீர், வேள்பாரி இருந்திருப்பானாயின், எங்கள் நாட்டுக்கு உங்கள் வருகை உண்டாகாதன்றோ?"


  1. புறம். 53.
  2. அகம். 78.
  3. புறம். 174.