பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 சேர மன்னர் வரலாறு



சின்னாட்குப்பின், வாழியாதன் கபிலருடன் கொங்கு நாட்டிற்குச் சென்றான். கபிலர்க்கு அவன்பால் விடைபெற்று மலையமான் நாட்டுத் திருக்கோவ லூர்க்குப் போக வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. சேரமானும் அவர் கருத்தை மதித்து, சிறுபுறம் என நூறாயிரம் காலம் பொன் கொடுத்து, நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான். இந் நன்றா என்னும் குன்று, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாணா என மருவி வழங்கிற்று. இந் நாளைப் பவானியை நாணா என்று கூறுகின்றனர். திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நாணாவைக் குன்றென்று கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று கபிலக் குறிச்சி எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கிறது.

இது நிற்க, கடுங்கோவிடம் விடை பெற்றுக் கபிலர் சென்ற சின்னாட்குப்பின், சேரமான் வஞ்சிநகர் சென்று சேர்ந்தான், சில ஆண்டுகட்குப் பின், மதுரைக்கு வட கிழக்கில் வாழ்ந்த பாண்டி நாட்டுத் தலைவனொருவ னுக்கும் பாண்டி வேந்தனுக்கும் போர் உண்டாயிற்று. அப் போரில், பாண்டியனுக்குத் துணையாகச் செல்வக் கடுங்கோ ஒரு பெரும் படையுடன் பாண்டி நாடு அடைந்து சிக்கல் என்னும் இடத்தே பகை வேந்தனை எதிர்த்துப் போர் உடற்றினான். அப் போரில் பகைவர் எறிந்த வேற்படை ஒன்று செல்வக் கடுங்கோவின் மார்பிற்பட்டுப் பெரும் புண் செய்தது. அவனும் தன் அரிய உயிரைக் கொடுத்து என்றும் பொன்றாத பெரிய